Sunday, January 2, 2011

எனது அமெரிக்கப் பயணம்-ட்ராயில் தங்கியிருந்த போது... பகுதி 3


  இரவு 9 மணி ஆகியிருந்தது. ஷட்டில் வசதி 8 மணி வரை தான். அது எங்களுக்கு முன்பே தெரியும். நடந்து திரும்புவோம் என்று நான் சொன்னதை புனே நண்பன் ஏற்றிருந்தான். ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தோம்.சாலையோரம் ப்ளாட்ஃபார்ம்கள் வெள்ளையாகப் பனியால் மூடப்பட்டிருந்தன. 
  கோல மாவை ஒரு சீராகக் கொட்டி வைத்தது போலிருந்தது பனி. பொமரேனியன் போலச் சாதுவாகப் படுத்திருந்தது.கொஞ்சத்தைக் கையிலெடுத்தேன்.வெறுங்கையில்!.சிறு வயதில் விளக்கு தீபத்தைத் தொட்டு, பாடம் கற்றுக் கொண்டது போன்ற அனுபவம் மீண்டும் அதற்கு எதிர்மாறான வெப்பத்தில் கிடைக்கப் போகிறதென்று தெரியாமல்..

  பனி எடை குறைவாக இருந்தது.கோல மாவின் எடையை எதிர்பார்த்தால் ரவையின் எடை மாதிரி இருந்தது. ஆச்சரியமாகக் குளிர்ச்சியே இல்லை.”என்னாங்கடா!”.மேலும் வைத்திருப்பதில் ஆர்வம் இல்லாததால் கீழே உதிர்த்தேன்.உதிர்த்த பின்னும் பனி விரல்களில் பட்ட இடங்களில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தின் குளிர்ச்சி விர்ர்ர்ரென்று இழுத்தது. என் மொத்த உருவத்தையும் என் விரல்களுக்குள் இழுக்கப் பார்க்கும் முயற்சி மாதிரி.”அடப் பாவிகளா” என்று விவேக் பாணியில் சொல்லி வடிவேல் பாணியில் “வ்வுவுவுவூவூ....” என்று கத்துவது போன்ற நிலைமை. தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளில் கதாநாயகனும் நாயகியும் பனியில் பாடி,ஆடி,ஓடி..பனியை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுவர். (உ-ம் வா வா வா கண்ணா வா பாடல், ரஜினி அமலா நடித்தது)அவர்கள் அக்காட்சியில் க்ளௌஸ் அணிந்திருப்பதை நான் கவனிக்காதது அவர்கள் தவறல்ல.
   
  வரும் வழியில் ஸ்டார் பக்ஸில் காஃபி மோக்கா குடித்தோம்.அன்று நான் ஸ்டார் பக்ஸில் நுழைந்தது காஃபி மோக்காவிற்காக என்பதைவிட குளிரிலிருந்து கொஞ்ச நேரம் தப்புவதற்காக..
   ஹோட்டல் எதிரில் வந்து விட்டோம். சாலையில் சில வண்டிகள் பாறிச் சீய்ந்து கொண்டிருந்தன.இல்லை சீறிப்பாய்ந்து கொண்டிருந்தன.மன்னிக்கவும்.குளிரின் நடுக்கத்தால் வார்த்தைகள் குளறி விட்டன. சாலையைக் கடப்பது சிறிது சிரமமாக இருந்தது. ஒரு கார் 
வந்து கொண்டிருக்கும் போதே புனே நண்பன் குறுக்கே ஓடலாம் என்றான். நான் அவனிடம் எனது கொள்கையைச் சொன்னேன். ”நான் செய்தியில் வருகிறேனென்றால் அதை நான் பார்க்க வேண்டும்!”. ஒரு வழியாக சாலையைச் சமயம் பார்த்து ஓடிக் கடந்தோம். இருவரும் அந்த அல்ப வீரச் செயலைச் செய்து முடித்தற்கு “We are daring Indians" என்று பாராட்டிக் கொண்டோம்.
  
  ஹோட்டலின் பக்கத்துக் கடையில் இருவரும் சாப்பிடும் போது புனே நண்பன் மிகவும் சந்தோசமாக இருந்தான். தான் வந்து இரண்டு வாரத்தில் இன்று தான் இரவில் நடந்திருக்கிறேனென்றும், இது ஒரு அட்வென்ச்சர் இரவென்றும் சொன்னான். நான் அவனின் இமெயில் விலாசத்தை வாங்கிக் கொண்டு எங்கள் அறைகளுக்குச் சென்றோம். மறு நாள் காலை அவன் செக் அவுட் செய்து வேறு பகுதிக்குச் செல்ல வேண்டும்.
      நான் இரண்டு மணி நேரம் தான் தூங்கியிருப்பேன்.சென்னை போய்ச் சேர்ந்தபின் இரவில் தூக்கம் வராமல் முழித்திருப்பதைவிட ட்ராயில் முழித்திருப்பது என்று முடிவு செய்தேன்.கீழே வந்து ரிசப்சன் பக்கத்தில் காபி எடுத்துக் கொண்டேன். அதிகாலை 4 மணிக்குக் காபி கிடைக்கும் அமெரிக்க ஹோட்டல் வாழ்க. கத்திச் சொல்லவில்லை.நினைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலும் ரிசப்சனிஷ்ட் பரப்பரப்பாகக் காலை உணவுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.கிச்சனிலும் ஆள் இருப்பது தெரிந்தது. ரிசப்சனிஷ்ட் என்றவுடன் கொடியிடையாளைக் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். அவள் ஒருத்தியே இரண்டு சுமோ பயில்வான்களை,நம் கிராமத்துத் திருவிழாக்களில் சிலர் சிறுவர்களைத் தூக்கிச் செல்வது போலத் தோளுக்கொருவராகத் தூக்க முடியும்.துளிக்கூட அசராமல் இரவு முழுதும் வேலை பார்க்கும் அவர்களிடம் “Don't you know Bongu?" என்று கேட்கலாம் போல் இருந்தது. 
    
   இன்டெர்நெட் வசதியைப் பயன்படுத்தி இப்பயணக் கட்டுரையின் ஒரு பகுதியைத் தட்டச்சு செய்தேன். அந்த இன்டெர்நெட் வசதி இலவசம் என்பது என்னை அதனைப் பயன்படுத்தத் தூண்டியது. இலவசம் என்றதும் பரவசம். மூச்சு விட அரசாங்கம் காசு கேட்டால் நாம் ம் கட்டியே வாழப்பழகி விடுவோம்.இலவசம் என்பதால் ஆழ இழுத்து மூச்சு விடாமல் மேலோட்டமாக வேக வேகமாகப் விட்டுக்கொண்டிருக்கிறோம்.அன்று நான் 6 மணிக்கே பஃபே ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு வந்து விட்டேன். காரணம் அந்த நேரத்தில் அமெரிக்க மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். (அட,உண்மை தாங்க! நம்பாமல் மானிட்டரிலிருந்து பின் வாங்கிய தலையை திரும்ப முன்னே கொண்டு வரவும்.நன்றி!)

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/4.html

No comments:

Post a Comment