Saturday, January 15, 2011

எனது அமெரிக்கப் பயணம்-டல்லாஸிலிருந்து லண்டனுக்கு

டல்லாஸில் மதியம் பசியோடு பெட்டி எடுக்கக் காத்திருந்தேன். போகும் போது, என் செக் இன் பெட்டியை இன்னொரு ஏர்லைன்ஸிலிருந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்கு நான் தான் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.’No formalities', படக்கென்று வாங்கி வைத்துக் கொண்டார்கள், நான் பெட்டி வருமோ வராதோ என்று பயந்த அளவுக்கு.( வருமோ வராதோ, நிக்குமோ நிக்காதோவை ஞாபகப்படுத்துகிறது.பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் ஜப்பானில் இருந்தால் ‘நிக்குமோ நிக்காதோ’ என்று பெயர் வைப்பார்களாம். நான் சேர்த்தது..சீனாவில் இருந்தால் அதன் பெயர் ‘சாய்ஞ்சாச்சூ’.  இப்போது அமெரிக்கன் ஏர்லைன்ஸிலிருந்து என் பெட்டியை வாங்கி, அடுத்த ஏர்லைன்ஸுக்குக் கொடுக்கக் காத்திருந்தேன். ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” கதை தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வெள்ளைக்காரச் சிறுமி,L.K.G/U.K.G படிக்கலாம், அழகாகப் பேசிக்கொண்டிருந்தாள்.பூ நடப்பது போல் நடந்தாள்.

    என் கூட வந்த மற்ற பயணிகள் மெல்லக் காணாமல் போய்க் கொண்டிருந்தார்கள்,பெட்டிகளை எடுத்துக் கொண்டு.’Something wrong'.பெட்டி மிஸ் ஆகி விட்டது என்று பதைபதைக்குமுன் அதைக் கன்ஃபர்ம் பண்ணிக் கொள்ள முடிவு செய்தேன். இல்லை பதைபதைப்பு வீணாகிவிடும். விசாரித்ததில், பெட்டி என் அடுத்த விமானத்திற்கு தன்னாலே போய் விடும் என்றார்கள். (இதற்கு முன் இப்படி ஒரு பதைபதைப்பு, யுனிவர்சிட்டி பரிட்சை ஒன்றில் 8 கேள்வியில் 5 எழுத வேண்டும்.முதல் கேள்வியைப் படித்தேன்.ம்ஹூம்,சாய்ஸில் விடு,அடுத்த கேள்வி..அட விடு சாய்ஸில..இப்படியே விட்டு விட்டுக், கடைசியில் அடுத்த கேள்வியில்லாமல் வொயிட் ஸ்பேஸே வந்து விட்டது.அடப் பாவிகளா! இந்த எட்டில தான் எழுதனுமா? பி.கு. அந்தப் பரிட்சையில் நான் பாஸ் தான்.)  
  
பேக்கேஜ் செக் பசங்களிடம் லண்டன் போக டெர்மினலுக்கு எப்படிப் போக வேண்டுமென்று கேட்டேன். அவர்களிடம் கேட்டது தப்பாகப் போய் விட்டது. அவர்கள் தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள்.நான் ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியில் வந்து அவர்கள் சொன்ன ப்ளூ கிரீன் வண்டியைப் பிடிக்க வந்தேன்.அந்த ப்ளூ கிரீன் வண்டியை ஓட்டிய பெரிய மனுஷியும், அதில் பயணித்த Maxim படத்தின் அட்டையில் இருந்து வந்த மாதிரியிருந்த இன்னொரு பெண்ணும் எனக்குப் பதில் அவர்கள் டென்ஷன் ஆனார்கள். Maxim பெண் சொன்னாள், ’When you have a connection flight, never come out of the airport'.அவள் ஆடை எப்படி இருந்தாலென்ன மனசு நல்ல மனசு.
    
இன்னொரு முறை வரிசையில் நின்று, நம்ம காபின் லக்கேஜ்ஜையும், நம்மளயும் எக்ஸ் ரே செக் பண்ணி.., இதற்கெல்லாம் நேரம் இருந்தால், நாம் ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் உள்ளே போய் என்று பல முறை இந்த ஜிகு ஜிகு தாம்பாளம் விளையாடலாம்.


     அந்தா இந்தான்னு சாப்பிடும் போது, 3.30 மணி ஆகி விட்டது(மதியம் தான்).வெஜ் பர்கர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்த்த கடை எக்ஸ்பிரஸ் ஸ்பாவைக் கவனித்தேன். ஒரு அம்மணி மசாஜ் பண்ணிக் கொள்ள ஒரு இருக்கையில் உட்கார்ந்தாள்.ஒரு ஆள் அவள் பிடறி முடியில் கை விட்டு கழுத்தை நிதானமாகப் பிசைந்தான். எனக்கு அதைப் பார்த்த போது நம் நடிகர்கள் நிறையப் பணம் வாங்கிக் கொண்டு செய்வதை அவன் குறைந்த சம்பளத்தில் செய்கிறான் என்று தோன்றியது. அடுத்து அவன் நிதானமாகத் தோல் பட்டை,முதுகு,இடுப்பு என்று தன் கைகளால் அழுத்....தி,அழுத்....தி நீவி விட்டதைப் பார்த்ததில் எனக்கு நல்ல ரிலாக்சேஷன் கிடைத்து என் உடல் வலி குறைந்த மாதிரி ஆனது.  
   வெளிநாட்டு ஏர்ப்போர்ட்களில் இந்தியர்களைப் பார்த்தால் எழுதி ஒட்டாத குறையாகத் தெரிகிறது. அவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது போல் தோன்றும். 


    டல்லாஸ் ஏர்ப்போர்ட்டில் சாம்சங்ஙின் ஆட்சி தான். ஷோ ரூமென்ன, பெரிய டி.விக்கள், சாம்சங் மொபைல் சார்ஜிங் ஸ்டேசன்கள் என்று...எனினும் நீங்கள் சார்ஜ் செய்ய முடியாது.சிலர் சார்ஜ் செய்தபடி பக்கத்திலுள்ள சொகுசு இருக்கைகளில் உட்கார்ந்தபடி அவரவர் நாட்டு ராமாயண/மகாபாரதக் கதைகளை MP3யில் கேட்டுக் கொண்டும், iPhone/iPadகளில் பார்த்துக் கொண்டுமிருப்பார்கள். விமானம் கிளம்பச் சிறிது நேரம் இருந்தது. அந்த நேரத்தில் சில புகைப்படங்கள் எடுத்தேன். ஒரு கடை வெளியே, 3 இடியட்ஸ் படத்தில் வரும் அச்சு முறுக்கு டிசைனில் உள்ள பறக்கும் பொம்மையை இயக்கிக் கொண்டிருந்தாள் ஒருத்தி. பறக்கும் பொம்மை விலையைப் பார்த்தவுடன் நான் அங்கிருந்து பறந்து விட்டேன். 
   
விமானத்தில் ஏறி உட்கார்ந்து, அது கிளம்பும் வரை, ஹீட்டர் போட்டிருந்தார்கள் போல... கிட்டத்தட்ட ஆப்பாயில் ஆவது போல் வெப்பம். 
சென்னையில் கோடை கத்திரி வெயில் காலத்தில்,மாநகரப் பேருந்தில் ஓட்டுனர் பக்கத்தில் நின்று பயணிப்பது போன்ற வெப்பம். இதைத் தாங்குவதை விட வெளியே உள்ள பனியே மேல்.


   அடுத்த வரிசையில் ஒரு கறுப்புச் சிறுமி,2 வயதிருக்கும், மூக்கு ஒழுக உட்கார்ந்திருந்தாள். சிறு பிள்ளைகளுக்கு அசிங்கங்களும் அழகு தான். 
    பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாத்தா. குடி வண்டி கொண்டு வந்த போது இதற்குக் காசு வாங்குவீர்களா என்றார் கனிவான குரலில்(நம்ம கேசு!). இல்லை என்று பதில் வந்ததும், bloody maryயை vodkaவில் மிக்ஸ் பண்ணித் த்ரச் சொன்னார் கம்பீரமான குரலில். ஒரு டம்ளர் கொடுத்தவுடன்,கையில் வாங்கிக் கொண்டு இன்னொரு டம்ளர் கேட்டார்.அதையும் வாங்கியபின் அவர் மோஹன ராகத்தில் சொன்ன "Thank yoUUU"விற்காக எத்தனை டம்ளர் கூடக் கொடுக்கத் தோன்றும். பெரியவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஒவ்வொரு முதியோரும் புத்தகம் தான். சிலரிடம் செய்ய வேண்டியவைகளையும் சிலரிடம் செய்யக் கூடாதவைகளையும் தெரிந்து கொள்ளலாம். 


    பனியால் கால்களில் சிறிது நமைச்சலாக இருந்ததென்று, விமானப் பணி ஆளிடம் வேசலின் கேட்டேன். (மயித்தக் கட்டி மலைய இழுப்போம்.வந்தா மல, அந்தா மயிறு.). பணி ஆள், சோப்பு இருக்கிறது என்றார். தமிழ் இலக்கணத்தில் இடக்கரடக்கல், ’உப்பு உளதோ வணிகரே!’ என்றால் ’பருப்பு உளது!’ என்பதாம். அப்போது படிக்க நன்றாயிருந்தது. ஆனால் நிஜத்தில் ’வேசலின் உளதோ பணியாளரே’ என்று கேட்டு ’சோப்பு உளது’ என்று பதில் வந்தால் எரிச்சல் வந்தது. ”எங்கிட்ட வானத்தில இடக்கரடக்கல்,குழூவுக்குறி எல்லாம் வச்சுக்கிட்ட உன்ன மங்களம் பண்ணிப்புடுவேன்.”   

  அந்த விமானத்திலும் ஒரு பத்திரிக்கை தன் அட்டையின் வலது,கீழ் மூலையில் ‘Take me home' என்றது. மறுக்காமல் என் வீட்டிற்குக் கூட்டி வந்தேன். 

Next Page> http://venkatramvasi.blogspot.in/2011/01/1_21.html

No comments:

Post a Comment