Saturday, October 1, 2011

சிறு கவிதைகள் - தொகுப்பு 16

அதன் பின் அழியலாம் உலகம்
மெலிந்த உடல் வலிக்க,
ரிக்‌ஷா இழுத்து வாழ்வை இழுக்கும் 
முனுசாமி மகன்
படிப்பில் நடிப்பின்றி
வறுமை புரிந்து 
பாடமும் புரிந்து
வாழ்வைப் படிக்கிறான்.
அவனோர் நாள்,
முனுசாமியைப் பக்கத்தில்
வைத்துப் படகுக்கார் ஓட்டட்டும்... 
அதன் பின் அழியலாம் உலகம்.

தெருத்தெருவாய் அலைந்து
இடி மழை பாராது
இடியாப்பம் கூவி 
விற்கும் குமரப்பன்...
உடலில் அலுப்புண்டு
மனதில் இல்லை.
பெடல் மிதித்துப்
பின்னங்கால் வலி,
ஓட்டல் தொடங்கும் 
லட்சிய வெறியில்
மறத்துப் போனது!
அவனோர் நாள்,
ஓட்டல் தொடங்கட்டும். 
அதன் பின் அழியலாம் உலகம். 

கல்யாணக் கனவோடு
காத்திருக்கும் கல்யாணி
சுயம்வரத்திற்கு வந்த
ராஜகுமாரர்
புற அழகு மட்டும் 
தெரிந்த குருடராய்ப்
புறமுதுகு காட்டிப் 
போயினர்.
அக அழகு தெரியும்
காளையை அவள்
மணம் புரியட்டும்...
அதன் பின் அழியலாம் உலகம். 


மனிதர்கள் கனவுகள்
சுமக்கும் பெட்டிகள்.
கனவுகள் நிறைந்த 
வாழ்வு உலகமெங்கும்...
புறை தீர்ந்த கனவுகள் மெய்ப்படட்டும்.
அதன் பின் அழியலாம் உலகம்.


No comments:

Post a Comment